நான் யார்?
இயல்பாய் இருப்பதாய்த்தான்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
அயலிடம் அநீதி
அடைகையிலென்னவோ
விழிகள் பெருத்து நாக்கு நீண்டுவிடுகிறது
உயிர்கள் இம்சை காண்கையில்
உணர்வில் அழுத்தி
சிலுவை தூக்கிச் சுமக்கிறது மனசு
கயிறுகளால் கட்டப்படும்
கணங்களில் என்னைக்
கட்டுப்படுத்த முடியாமல்
அறுத்துக் கொள்ளக் கத்தி தீட்டுகிறேன்
குயிலிசைக்குள் மூழ்கி
குழல்களுக்குத் துளையிட்டு
காற்றை அவைகளில் செலுத்துகிறேன்
துயிலும் உடலங்கங்கள்
துறந்த ஆன்மாக்களுக்கு
நித்திய வழி செதுக்க நினைக்கிறேன்
பயின்றவை ஒன்று
பழகியவை ஒன்று
இரண்டையும் முறுக்கித்திரி செய்கிறேன்
வயிற்றுப் பசியுணர்ந்தும்
வளங்கள் உறைபடர்ந்தும்
நொடிகளை மணிகளாக்கிக் காய்கிறேன்
இப்படித்தான் நான்
இதுதான் நானென்று
இலக்கண வரையறை சொல்ல
உலகம் விட்டதில்லை
எப்படி மாறுவேனென்று
எனக்கும் தெரியவில்லை
- மகி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.