சிற்றுயிர்களிடம் கற்போம்...!
சேமிப்பை எறும்பு சொன்னது
சுறுசுறுப்பை தேனீ சொன்னது
விடாமுயற்சியை சிலந்தி சொன்னது
கம்பீரத்தைச் சிங்கம் சொன்னது
சுறுசுறுப்பாய் முயன்று வென்று சேமித்துக்
கம்பீரமாய் வாழ்ந்து காட்டு மனிதா நீ.
தீமையை விலக்கி வாழ அன்னம் சொன்னது
காலம் வரும்வரை காத்திருக்க கொக்கு சொன்னது
ஐம்புலனை அடக்க ஆமை சொன்னது
நன்றியோடு வாழ நாயும் சொன்னது
தீமையை விலக்கி ஐம்புலன் அடக்கி
காத்திருந்து வெற்றியாய் வாழ்ந்து காட்டு மனிதா நீ
இணையோடு இணைந்திருப்பதை அன்றில் சொன்னது
குழந்தையைப் பாதுகாப்பதை கங்காரு சொன்னது
மானம் பெரிதென வாழ கவரிமான் சொன்னது
உறவோடு பகிர்ந்துண்ண காகம் சொன்னது
இணையோடு மகிந்து உறவோடு இணைந்து
பிள்ளையைக் காத்து வாழ்ந்து காட்டு மனிதா நீ.
சிற்றுயிரும் நமக்கு கற்றுக் கொடுக்கும்
வெற்றியாய் வாழும் வழியை நாளும்
அன்னை தந்தை ஆசான் மூலம் கற்பதும்
இயற்கை காட்டும் வழியில் நடப்பதும்
நம்மை நல்லவனாக வாழ வைக்கும்
சிற்றுயிரும் உற்ற துணையென சொன்னது இதைத்தான்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.