நிறைவற்றிருக்கிறேன்
இருள் விலகி வெளிச்சம்
பெருமூச்செறியும் இனிய நாளில்
பிரபலமான இதழில்
பிரசுரமாகியிருக்கிறது எனது கவிதை
இதைக் கொண்டாடவியலாமல்
சலனத்தில் சரிந்திருக்கிறது
எனது மனம்.
இறகுபோல் கனமின்றி
இலகுவாய் நெஞ்சத்தில் அமர
தெளிந்த அர்த்தங்களுடனும்
தெரிந்த படிமங்களுடனும்
அழகாய்ப் புனைந்திருந்தேன்
கவிதையை.
கவிதை
எப்புள்ளியில் தொடங்கியதோ
அதில் திசைமாறாமலும்
சொல்ல நினைத்ததைக்
கருச்சிதையாமலும்
நேர்த்தியாய்ப் பயணித்து
முடித்திருந்தேன்.
கண்கள் இருக்க வேண்டிய
இடத்தில் காதுகளும்
கைகள் இருக்க வேண்டிய
இடத்தில் கால்களும்
முதுகு இருக்க வேண்டிய
இடத்தில் வயிறுமாய்
கவிதையின் உயிரறுத்து
சிதைத்திருக்கிறார்கள் பாவிகள்.
குறியும்
இடம்மாறி இருக்கிறது.
ஆன்மாவைப் பிழிந்து
கற்பனைவளம் மிகுந்திருந்த
எனது கவிதையில் உருவம் சிதைந்த
மனிதனாய் நிறைவற்றிருக்கிறேன்
நான்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.