வெங்காயம்
பெரியாரின் சொற்களிலே உவமை யாகி
பெருமைமிகு தத்துவத்தின் உருவ மாகி
அரிதான கருத்துகளை விளக்கு தற்கே
அடையாள மாய்க்காட்டும் காட்டு மாகி
புரியாத உலகைவிட்டுப் போகும் போது
புறமெடுத்துச் செல்வதேதும் இல்லை யென்றே
உரிக்கஉள்ளே ஒள்றுமில்லா உண்மை தன்னை
உணர்த்துகின்ற காய்என்பேன் வெங்கா யத்தை !
இதயத்தின் தோழனாகக் குருதி தன்னில்
இயல்பிற்கு மேல்கொழுப்பைக் கரைத்து நிற்கும்
பதம்பார்த்த குளவிதேனீ கடியி டத்தில்
பக்குவமாய்த் தேய்த்திட்டால் விடம்மு றிக்கும்
இதமாக உடலுக்குக் குளிர்ச்சி தந்தே
இருக்கின்ற கிருமிகளை நாச மாக்கும்
உதவுகின்ற கரங்களாக உண்ட உணவில்
உதவாத பொருள்களினைக் கழிவாய்த் தள்ளும் !
முருங்கைக்காய் போலப்பால் உணர்ச்சி தூண்டும்
முழுஆப்பில் தனிலுள்ள சத்தை ஈயும்
அரும்மருந்தாய் புற்றுநோயை விரட்டி ஓட்டும்
அருங்கூந்தல் உதிர்வதினைத் தடுத்து நிறுத்தும்
வெறுங்காயம் இல்லையிந்த வெங்கா யந்தான்
வெற்றுடம்பைப் பொன்னுடம்பாய் மாற்றும் காயம்
பெரும்பயனைத் தந்துநம்மின் காயம் காக்கும்
பெருமைமிகு வெங்காயத்தைப் போற்று வோமே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.