அப்பா!

தொலைத்தேன் உலகத்தை
காண்கிறேன்
தந்தையின்
தன்னைம்பிக்கையில்...
வருடம் முழுவதும்
அயராது பாடுபட்டு
அறுவடை நாளில்
புயல் வீசும்
அடைமழை பொழியும்
வெள்ளம் சூழும்
உழைப்பையெல்லாம்
ஒரு நொடியில்
பாழாக்கிப்போகும்
இயற்கைச்சீற்றம்…
உருக்குலையாத
மனநிலையில்
மீண்டும்
கழப்பையோடு
கழனியில்
பயணிக்கும்
தந்தையைக் காண்கையில்
தொலைத்த தன்னம்பிக்கை
புத்தொளிர்பெற்று
உயிர்த்தெழும் பேராற்றலாய்
அப்பா…
அயராது பாடுபட்ட
நாளெல்லாம்
ஒரு வினாடியில்
வீணாய்போன பின்பும்
மீண்டெழும் உள்ளம்
இரும்பும்
இறுமாப்புக்கொள்ளும்…
வாழ்வில்
உழைப்யையே
முதலீடாய்
விதைத்தாய்…
விருட்சங்களாய்
வரமருளினாய்
உறவுகளின்
உரவிற்கு
வார்த்தை
மூலதனத்தில்…
வைரத்தை
அறியாதவன்
உள்ளத்தையே
வைராக்கியமாக்கினாய்
செயல்களில்…
ஏட்டறிவு பெறாத
மூடனாய்
வலம் வந்தாலும்
பாருக்கு
படியளக்கும்
உத்தமனாய்
உலாவுகின்றாய்…
பள்ளிக்கூடம்
சென்றதில்லை
பக்குவமாய்
பழகுகின்றாய்
பாசமழையில்…
மண்வெட்டி
பிடித்தக்கரங்கள்
குருதியால் …
காப்புக்காய்ச்சாலும்…
பிள்ளைகளின் மேல்
மன்மதன் போலவே
காதல் கணைகள்
தொடுக்கின்றாயே…
இரவும் பகலும்
அயாராது
பாடுபட்டாலும்
எண்ணமெல்லாம்
என்னவோ…
பிள்ளைகளின்
ஏட்டுக்கல்விக்கோ
முதன்மைக்கொடுக்கின்றாய்…
யான் பெறாத
அறிவையெல்லாம்
பிள்ளைகள்
பெறவேண்டும்
என்றுரைக்கின்றாய்…
கைநாட்டாய்
சுற்றித்திரிந்தாளும்
உலகிற்கு
முன்மாதிரியாய்…
திகழ்கின்றாய்…
பாரமெல்லாம்
சுமந்தாலும்
பாரம் அறியாமல்
வளா்க்கின்றாய்…
அப்பாவின்
ஆழம் அறியவே
முற்படுகின்றேன்
மனதிற்குள்
வலிகளை
சுமந்துகொண்டு
இருகரங்களில்
வழிகாட்டும்
தோழாய் மாறியவன்
அப்பா…
இன்னல்கள்
இடி போல்
வந்துசென்றாலும்
இமைக்குள்
இமைத்துவிடுகிறாய்…
ஞானிகளாலும்
அளிக்கமுடியாத
அறிவினை
அகண்டமாக்குகின்றாய்…
அப்பா.
அன்னையோ
கருவறையில்
ஈரைந்து மாதங்கள்
சுமந்தாள்
ஆனால்
நீயோ
எண்ணிலங்கடா
வருடங்கள்
நெஞ்சாங்கூட்டை
கருவறையாக்கினாய்…
மோப்பக்குழையும்
அனிச்சம்
கணப்பொழுதில்
சுருங்கும்…
கடுஞ்சொற்களை
கேட்டும்
இதழ்விரிகின்றாய்…
புத்தம் புதிய
ஆடைகளை
அவ்வப்பொழுது
கொடுக்கின்றாய்…
கழனிச்சேற்றில்
நிறம் மாறாத
கோமனத்தோடேவே…
எந்நாளும்
காட்சி தருகின்றாயே…
ஏட்டறிவால்
உலகையாளும்
தகுதிகொடுத்தாலும்
என்னறிவு என்னவோ
நீதானப்பா…
நூறாயிரம்
நூல்கள் கற்றாலும்
அவையெல்லாம்
போதிக்காத பாடம்
ஒரு நூலில் கற்கிறேன்
தகப்பன் சொல்லில்.
எல்லோருக்கும்
உதவி செய்
எவரிடத்திலம்
எதையும்
எதிர்பார்க்காதே…
ஏமாற்றம்
மட்டுமே
மிஞ்சும்
என்றாயே…
வாரி வழங்குகின்ற
வள்ளல்களும்
கண்கலங்கிப் போவார்களே…
உழவுக்கு
விதைக்கும்
நெல்மணிகளையும்…
மனமுவந்து
கொடுப்பாயே…
கொடுத்தே
சிவந்த கரத்தில்…
எவரையும் கெடுக்காத
பண்பு படைத்திருக்கிறாயே…
தோல்வியுற்ற
பொழுதெல்லாம்
அனுபவம்
என்றுரைத்தாயே…
துவண்ட
உள்ளத்திற்கு
துப்பறிவாளன் போல
துலங்குகின்ற
நுணுக்கங்களை
நுவல்கின்றாயே…
பாரம்பரிய
கல்லூரியில்
கால்
பதிக்கவைத்தாலும்
உம்முடைய
கால்தடங்கள்
என்னவோ…
சேற்றில்…
விடியற்காலைப்
பொழுதிலே…
பறவைகளும்
பொறாமை கொள்ளுமே…
விழிகளின் விழிப்பில்…
சுறுசுறுப்பிற்கு
எறும்பும்
ஏணிவைத்துப் பார்க்குமே…
எட்டாத இடத்தை
எட்டிப்பிடிக்க
தோற்றேபோகுமேயப்பா…
அடிவயிற்றில்
நீா்
வற்றிப்போனாலும்…
பயிர்களுக்கு
நீர் வற்றாதே…
கலப்பையில்
மண்ணைக்
கிழித்தாலும்
தோண்டினாலும்
வெட்டினாலும்…
கோபம் கொள்ளாத
பூமாதாவின்
புண்ணியவனே…
எத்தனையோ
மாற்றங்கள்
மாறிக்கிட்டே
சென்றாலும்
மாறாத மாற்றம்
நீதானப்பா…
மல்லாந்து
படுக்கையிலே
ஆகாயத்தில்
ஒளிவீசும்
விண்மீன்கள்
குடிசைக்குள்
உலாவந்தாலும்
உள்ளமென்னவோ
மாடக்கோபுரம்…
எவ்வளவு
உயரத்திற்குச்
சென்றாலும்
வயல்வெளிகளில்
குடும்பத்தோடு
பழையச்சோறும்
வெங்காயமும்
தின்ற நாட்கள்
மீளும்மா…
அறிவுக்களஞ்சியமாய்
ஆளவைக்கும்
ஆண்டவனாய்
ஆளப்போகும்
கூட்டம்
அப்பா…
- சி. இரகு, திருச்சிராப்பள்ளி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.