வேட்டை நடத்து

காதலித்தால் குற்ற மென்று
கழுத்தறுக்கும் கூட்ட மொன்று
சாதலினைத் தெருக்கள் ம்மில்
சாதனையாய் நடத்து கின்றார் !
ஆதியிலே இல்லா ஒன்றை
அடிமனத்துள் வளர்த்துக் கொண்டு
சாதிகளில் கீழ்மேல் ஆக்கிச்
சரித்திரத்தை மாற்று கின்றார் !
குறுந்தொகையில் உள்ள மொன்றிக்
குலவுகின்றார் காத லர்கள்
நறுந்தொகையாம் அகநா னூற்றில்
நடக்கின்றார் கைகள் கோர்த்தே !
கலித்தொகையின் களவு தன்னில்
களிக்கின்றார் காத லர்கள்
பலிகொடுத்த செய்தி யொன்றும்
படிக்கவில்லை நாம வற்றுள் !
சாத்திரத்தைப் பார்த்த தாக
சாதிவெறி இருந்த தாகப்
பாத்திறத்தில் புலவ ரன்று
பதித்ததொரு குறிப்பு மில்லை !
சூத்திரமாய் யாரோ யின்று
சூட்டிவிட்ட சாதி யாலே
ஆத்திரத்தில் தமிழர்க் குள்ளே
அடிதடிகள் நடக்கு திங்கே !
தேர்தலுக்கு வேண்டு மென்று
தேர்ந்தெடுத்தே ஊர்கள் தோறும்
சீர்கொடுத்துச் சாதி தன்னைச்
சிறப்பாக வளர்க்கின் றார்கள் !
பெருந்தலைவர் ஆவ தற்கும்
பெயர்தன்னைச் சொல்வ தற்கும்
உருவாக்கிச் சாதி தன்னை
உருவேற்றி வளர்க்கின் றார்கள் !
கல்விக்குள் நுழைத்து விட்டார்
கடன்பெறவும் விதித்து விட்டார்
நல்லரசுப் பணிக ளுக்கும்
நடைமுறைவில் கொண்டு வந்தார் !
மதுக்கடையில் குடிகெ டுக்கும்
மந்திரச்சொல் வைத்த போல
ஒதுக்கீடு தந்த வற்றுள்
ஒட்டிவைத்தார் சாதி தன்னை !
முரண்களினை நீக்கு யென்று
முழங்குவதால் நீங்கி டாது
சொரணையினை ஏற்று தற்குச்
சொல்லுக்கும் வலிமை யில்லை !
சாட்டையிலே வடுக்க ளாக்கிச்
சாற்றினால்தான் சாதி ஓடும்
வேட்டையினை நடத்தி னால்தான்
வேண்டியநற் பொதுமை பூக்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.