இனிய கவிதை
மென்கவிதையாய்
தங்கத் தட்டினை ஏந்திவரும் சந்தி.
மேனிமுழுக்க
பட்டுக் கம்பளமாய் விரியும் நீலவானம்.
புதுமொழிகளைச்
சொல்லும் பறவைகள்.
தென்றலுக்குச் சுகமாய்
பனிக்குடங்களை உதிர்த்து
உடைத்திடும் பூக்கள்.
காற்றின் மொழிக்கு
இசைந்து தலையாட்டும் மரங்கள்.
தான் பிறந்த கதையை
திரித்து திரித்து விழும் காட்டருவி.
தன் உடல்முழுக்க
கொலுசு கட்டியோடும் நதிமகள்.
அகமகிழ்வை அலைகள் வழியே
மொழிபெயர்த்திடும் ஆழி.
மழைக்கால நத்தையாய்
மெல்ல புலம் பெயர்த்திடும் மேகங்கள்.
அந்திச்சூரியன் அடிவானில் நுழைய
மருதாணியப்பும் மேற்கு.
இரவின் பயத்திற்கு
வெளிச்சத்தைக் கைக்கோர்த்து
வரும் அம்புலி.
சிதறிய வைரங்களாய்
கண்சிமிட்டித் திரளும் விண்மீன்கள்.
தலையில் தீச்சட்டியோடு
வேண்டுதலின்றி ஒளிரும் தீபங்கள்.
இவையாவும்
அச்சில் சுழலும் அழகு பூமி
நித்தம் அருளும் இனிய கவிதை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.