விளிம்புகளெங்கும்...
பெருங்கடல் பார்த்த
அதிர்ச்சியும், ஆனந்தமும்
மீளவில்லை.
அலைகள்
இடறி இடம் பெயர்ந்தாலும்
மீண்டும் தஞ்சமடைகிறது
பிறந்த பெருங்கடலில்.
கடற்காற்று
"ஓம்" என்றெறுரைக்க
மணற்திட்டெங்கும் பூத்திருக்கும்
எண்ணற்ற ரெட்டைக்கால்
பூக்கள்.
கண்ணீர்க் காலத்துப் பிழைகளை
சொல்லி மாளாத அடவுகளின்
ஓலங்கள்.
அலட்சியமாய்க் கரைதட்டிய
வெண்நுரைகள்.
இதுநாள்வரை
கேட்ட கதைகள் ஏராளம்.
யாரும் கேட்காத
ஆதிரங்கனின் சங்கு
மலர்வளையம் வைக்கும் நோக்கில்
மரணத்தை ஆதரிக்கும் விதமாய்
மணற்பரப்பெங்கும்
இன்றைக்கும்
சதா கேட்டுக் கொண்டிருக்கிறது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.