இயற்கையைக் காப்போம்!
இயற்கையன்னை மடிதன்னில் தவழ்ந்தி ருந்தால்
இன்றளவும் பாதுகாப்பாய் அமைந்தி ருக்கும்
வயலெல்லாம் மழைநீரால் செழித்தி ருக்கும்
வற்றாமல் ஏரிகுளம் நிறைந்தி ருக்கும்
புயல்வந்து தாக்கினாலும் வெற்பும் காடும்
புறம்விரியும் குடைபோல காத்தி ருக்கும்
அயலாகிப் போனதெல்லாம் இயற்கை தன்னை
அழித்ததனால் குற்றுயிராய் ஆன துலகு !
வீசுகின்ற காற்றினிலே நஞ்சைச் சேர்த்தும்
விடும்மூச்சைத் தூய்மையாக்கும் மரத்தைச் சாய்த்தும்
காசுக்கு மலைகளினைத் தகர்த்தே விற்றும்
கருகலைத்தல் போல்மணலை அள்ளிப் போட்டும்
மாசுக்கே சுற்றுபுறம் பட்டா செய்தும்
மாவெப்பம் ஏற்றிஓசோன் ஓட்டை செய்தும்
பூசுகின்ற ஒப்பனையால் முகம்மாற் றல்போல்
பூமியினை மாற்றிட்டோம் செயற்கைப் பூச்சால் !
புதுஉரத்தால் தாய்மண்ணின் உயிர்ப றித்தும்
பூச்சிகொல்லி மருந்தடித்து நோய்கள் பெற்றும்
மதுசுரக்கும் மலருக்கும் காய்க றிக்கும்
மரபுமாற்றும் ஊசிபோட்டு சுவைகெ டுத்தும்
முதுமையிலும் திடமான உடல்ந லத்தில்
முன்னோர்கள் இருந்ததினைக் கனவாய் ஆக்கி
பொதுவென்னும் இயற்கையினைக் காத்தி டாமல்
போயழித்தே துடிக்கின்றோம் அறிவி ருந்தும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.