பேச மறந்த இதழ்கள்
அருகழைக்கும் வாசம்தான் இல்லை யென்றால்
அழகாகப் பூத்திருந்தும் தெரிந்தி டாதே
இருளுக்குள் இருந்தபோதும் மல்லி கைப்பூ
இருக்கின்ற இடம்தன்னை மணமோ காட்டும்
கருவுக்குள் உள்ளசிசு அசையும் போதே
கருதரித்த பெண்ணுணர்ந்து மகிழ்ச்சி கொள்வாள்
திருவாகச் சொல்லிருந்தும் உதடு கள்தாம்
திறவாத போததனை அறிவார் யாரே !
இதழ்திறந்து சிலரிங்கே பேசிப் பேசி
இல்லாததை உள்ளதாக நம்ப வைப்பர்
பதமாக அரசியலார் பேசிப் பேசிப்
பக்குவமாய் நம்வாக்கைப் பறித்துக் கொள்வர்
விதவிதமாய் ஆட்சியாளர் பேசிப் பேசி
வியக்கவைத்து நம்பொருளைச் சுருட்டிக் கொள்வர்
முதலீட்டாய்ப் பலரிங்கே பேச்சை வைத்து
முட்டாளாய் நமையாக்கி உயர்வைக் காண்பர் !
இலவசத்தால் மறக்கவைப்பர் ! குடிக்க வைத்தே
இதழ்திறந்து பேசிடாமல் மயங்க வைப்பர்
நலமிதுதான் எனநம்மை நினைக்க வைத்து
நம்முடைமை தனையவர்கள் உரிமை கொள்வர்
நிலம்மீது இதழ்திறக்க மறந்த தால்நாம்
நிற்பதையே எண்ணாமல் குதிக்கின் றார்கள்
வலமாக வரும்கயவர் தமையெ திர்த்தே
வாய்திறந்தால் போதுமவர் வீழ்வர் அஞ்சி !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.