மனிதம் எங்கே...?
வங்கிகளில் கோடிகளைச் சுருட்டி யோர்கள்
வான்வழியில் செல்கின்றார் அயல்நாட் டிற்கே
தங்குதற்கோ அழகான மாளி கைகள்
தரமாக உணவுவகை உல்லா சங்கள்
எங்கவர்கள் செல்வதற்கும் வாக னங்கள்
எப்பணியைச் செய்வதற்கும் வேலைக் காரர்
இங்கிருக்கும் ஆட்சியாளர் துணையாய் நின்றே
இவற்றையெல்லாம் செய்கின்றார் திருடர் கட்கே !
வாக்கிற்காய் வாக்குறுதி அள்ளித் தந்து
வாக்குபெற்றே அரியணையில் அமர்ந்த பின்பு
வாக்களித்த மக்களினை மறந்து நாட்டின்
வளங்களினை நாளெல்லாம் அள்ளிக் கொண்டே
ஏக்கத்தில் மக்களினை வாட விட்டே
ஏய்த்தவாறு இன்பமாக வாழு கின்றார்
தாக்குதற்கும் துணிவின்றித் திருடர் தம்மைத்
தாங்குகின்றார் மக்கள்தாம் அறிந்தி ருந்தும் !
செல்வந்தர் என்பதாலும் சமூகம் தன்னில்
செல்வாக்கு பெற்றவர்கள் என்ப தாலும்
பொல்லாத செயல்செய்தும் கண்டிக் காமல்
பொறுப்பின்றி இருந்தவர்கள்; பசியின் தீயை
வெல்வதற்கே உணவுதனை எடுத்த தற்காய்
வெற்றுடம்பு இரவலனை அடித்தே கொன்றார்
சொல்கின்ற மனிதமெங்கே போயிற் றின்று
சொல்லாமல் பணத்தின்பின் ஒளிந்த திங்கே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.