சாலை சங்கட(கீத)ங்கள்
கிராமத்துச் சாலையில்
பசுமை படர்ந்த மரங்களில்
வண்டின் ரீங்காரம்...
வண்ண மலர்களின் பரிசம்
வாழையின் சுவாசம்
புட்களின் பனித்துளி...
ஏரிகளில் நாரையின் அழகு
கொக்கின் ஒற்றைகால் தவம்
பாட்டியின் வெற்றிலை
பாக்கு இடிக்கும் இசையும்
உழவரின் காளைகளில்
கழுத்து மணி ஓசையும்
மழலையரின் ஆட்டம் பாட்டமும்
நான் வாழ வந்த
ஊரின் சுவாசங்கள் இவை...!
ஆனால்... இங்கு...?
நகரத்தின் வாசல்
வளரும் சூழல்
புகையின் பூமழை
வண்டிகளின் வரிசையும்
வானுயரப் பறக்கும்
வான ஊர்தியும்...
வயதானவர்களும்
தன்பணிக்கான ஓட்டமும்...
வெயில் தாக்கமும்
மரங்கள் மரித்த நிலையில்...
விளங்காத வெட்டிப்பயல்களின்
காட்டம் கிண்டலாக
பாதாளச் சாக்கடை
தொல்லை துர்நாற்றம்
மட்டும் பொதுவாக
நகரம் கிராமங்களில்...
அவசர பிரிவின் வாகனம் ஒசை
காதை கிழிக்கும்
நிமிடத்திற்கு ஒன்றாக
விபத்தில்லா நகரம் எப்போது
வீதிகளின் விளிம்பில்
மனிதனின் விதி!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.