விருது வாங்கலயோ விருது
அரசாங்க விருதெல்லாம் அடியாட் கட்கே
ஆட்சியாளர் கால்தொட்டு வணங்கு வோர்க்கே
தரமற்ற படைப்பெனினும் தங்கம் என்றே
தலைமீது தூக்கிவைத்தே ஆடு வார்கள்
வரமாகப் பிறப்பிருந்தே பாவி யற்றி
வருவோரே யானாலும் வாய்ப்பே இல்லை
இரப்போரைப் போல்கைகள் ஏந்தி மேனி
இழிவாகக் குனிவோர்க்கே பரிசு பட்டம்
அலங்கோல ஆட்சியாக நடக்கும் போதும்
அருமையான ஆட்சியென்றே புகழ வேண்டும்
கலங்கிமக்கள் வாடுமாறு ஊழல் செய்து
கண்முன்னே சுரண்டிபொருள் சேர்த்த போதும்
வலம்வந்து வலம்வந்த அமைச்சர் தம்மை
வாய்மணக்க உத்தமனாய்ப் போற்ற வேண்டும்
நலமாக இவ்வேடம் போடு வோர்க்கே
நற்தகுதி எனவழைத்து விருத ளிப்பர்
கவியெழுதத் தெரியாதோன் பாவின் வேந்தன்
கனித்தமிழைக் கல்லாதோன் தமிழில் அறிஞன்
நவின்றாலோ வசைமொழிதான் நாவின் வேந்தன்
நாள்ளெல்லாம் சுரண்டுவோனோ தொண்டின் சிகரம்
சிவிகையிலே இவர்களினை ஏற்றி வைத்துச்
சீராட்டிப் பணத்துடனே பரிச ளிப்பர்
புவிதன்னில் தாளத்தைத் தட்டு வோரை
புலமையாளர் ! விருதாளர் ! வாழ்த்து வோமே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.