அவனைப் பின் தொடருங்கள்...
காலப்பிசாசின் பரபரப்பு
அவசரமின்றி தடுமாற்றமில்லாமலும்
ஒழுங்கு முறையோடும்
சமச்சீராய் இருக்கிறது அவன் நடை.
அவன்
நெற்றியில் விபூதிக்கீற்றோ
கழுத்தில் சிலுவையோ
தலையில் குல்லாவோ ஏதுமில்லை.
அவன்
சிரசில் ஒளிவட்டமில்லை
காவி தறித்திருக்கவில்லை
காக்கி அணிந்திருக்கவில்லை
அவனிடம்
கட்சிக் கரை வேட்டியுமில்லை.
அவன்
மனதில் கடுகளவும் சதியின்றி
ஒரு தாயின் கருணையையும் பேச்சில்
மௌனம் தாலாட்டும் அன்பையும்
முழுமையாய்க் கொண்டிருக்கும்
புனிதனாய்க் காணக்கிடக்கிறான்.
அவனுக்கு முன்னால் ஒருவருமில்லை
யாரையும் பின்தொடரும்படி
அவன் பணிக்கவுமில்லை
எனினுமவனை வழிமொழிந்துச் செல்கிறது
ஒரு கூட்டம்.
அவனைப் பின்தொடர்பவர்களின்
நம்பிக்கையைப் பொய்க்காமல்
நிச்சயம் அகிம்சை வழியில்
எல்லோரையும் நல்வழிப்படுத்துவான்
அவன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.