தாய்ப்பாசம்
அழகான தீங்கில்லா
அன்பு போற்றிடும்
அன்னையின் பாசத்திற்கு நிகரேது...!
பரிவோடு பல உறவிருந்தாலும்
அம்மாவிற்கு இணையேது...!
வெள்ளிவருமுன் எழுந்து
அடுக்களை களைந்து
ஆசையாக உணவு சமைத்து
குழந்தைகளைப்
பாராட்டி, நீராட்டி, சீராட்டி
சீருடை அணிவித்துப்
படைத்த உணவைப்
பக்குவமாய் அளித்து
புத்தகப்பையைத் தன் தோளில் சுமந்து
பள்ளிக்கு அனுப்பி வைத்தாலும்
பிள்ளை கவனமாய்
கல்வி கேள்விகளில்
கண்ணும் கருத்துமாய் உள்ளதா,
களைத்த வேளையில் உணவுண்டதா என்று
கவலையில் உழல்பவள் அம்மா...!
மாலைப் பொழுதினில்
பள்ளி முடிந்து வரும் பிள்ளையைச்
சோர்வில்லாமல்
வணக்கம் சொல்லி
அன்பு ஒன்றே பிரதானமாய்
அன்பாய் அரவணைத்து
பரிவுகாட்டி, பள்ளியின்
அன்றைய நிகழ்வுகளைக் கேட்டறிந்து
பாடங்களைப் படிக்க வைத்து
படுத்துறங்கச் சென்றாலும்
பல கதைகளைச் சொல்லி
உறங்க வைப்பது
அனுதினமும் தொடர்கிறது
அன்னையின் கடமையெனும் கனிவு...!
அது பிள்ளையின் எதிர்காலம்
குறித்த கனவு... பூரிப்பு...!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.