இன்று புதிதாய் பிறந்தோம்

பூத்திருக்கும் பூஞ்செடிகள் ! பச்சைப் பட்டைப்
போர்த்திருக்கும் மலைச்சாரல் ! வானை முட்டக்
காத்திருக்கும் பசும்மரங்கள் ! அடர்ந்த காடு
கவின்கொஞ்சும் தோப்புகளும் சோலை சேர்ந்து
கூத்திசைக்கும் இயற்கைவளம் மாசே யின்றிக்
குவிந்திருக்கும் புதுவுலகைப் படைப்ப தற்கே
ஏத்தியிங்கு பிறந்திட்டோம் புதிதாய் என்றே
எல்லோரும் இணைந்திடுவோம் வாரீர் இன்று !
சாதிகளின் பிரிவுயின்றி உயர்வு தாழ்வு
சண்டையின்றிச் சாத்திரத்தின் பேத மின்றி
ஆதிக்க மதங்களின்றி வணங்கு கின்ற
ஆண்டவனில் முரண்பட்ட கருத்து மின்றி
வாதித்து வருத்தத்தை வளர்ப்போ ரின்றி
வளரன்பே நிறைந்திருக்கும் உலகம் தன்னைச்
சாதிக்கப் பிறந்திட்டோம் புதிதாய் என்று
சரித்திரத்தைப் படைத்திடுவோம் வாரீர் இன்று !
பலமொழிகள் பேசினாலும் அறிவு என்னும்
பாலத்தால் ஒருங்கிணைத்துக் கணினி மூலம்
பலரிடத்தும் பலமொழியில் பேச தற்குப்
படிசமைத்து மொழிச்சண்டை ஏது மின்றி
இலக்கியங்கள் மொழிமாற்றம் செய்து தம்தம்
இலக்கியமாய்ப் போற்றுகின்ற பொதுமை நெஞ்சில்
கலந்தபுது உலகத்தைப் படைப்ப தற்கே
கரம்கோர்ப்போம் புதிதாகப் பிறந்தோ மென்றே !
உயர்சக்தி அணுக்குண்டை அழிவிற் கின்றி
உயர்த்துகின்ற ஆக்கத்தின் வழிச மைத்தே
உயரறிவால் கண்டிடித விஞ்ஞா னத்தை
உயர்வாழ்வின் மேன்மைக்குப் பயனாம் என்றும்
அயல்நாட்டை அச்சுறுத்தும் இராணு வத்தின்
அணிவகுப்பு போர்க்கருவி ஏது மில்லா
நயவுலகைப் புதிதாகப் படைப்ப தற்கே
நாம்பிறந்தோம் எனஇணைவோம் வாரீர் இன்று !
நாடுகளுக் கிடையெந்த எல்லை யின்றி
நாடுசெல்ல அனுமதியும் தேவை யின்றி
வாடுகின்றார் ஒருநாட்டு மக்க ளென்றால்
வளநாடு கரங்கொடுத்துக் காத்து நின்று
பாடுபட்ட பலனெல்லாம் அனைவ ருக்கும்
பகிர்ந்தளிக்கும் பொதுவுடைமை உலகு தன்னைப்
பீடுடனே புதிதாகப் படைப்ப தற்குப்
பிறந்திட்டோம் எனஇணைவோம் வாரீர் இன்று !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.