ஆத்தங்கரை ஓரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தைமகள் பக்கத்திலே
பூத்துதென்றல் வீசுகையில்
பூவுலகை நான்மறந்தேன் !
ஓடும்நீரும் சலசலக்க
ஒய்யாரமாய் மீன்குதிக்க
ஆடும்மலரும் அருகழைக்க
அவளுக்கதைப் பறித்தளித்தேன் !
ஓரக்கண்ணால் அவள்பார்த்தே
ஒளிரும்முத்தால் புன்னகைத்தாள்
சோரம்போனேன் அவள்நகையில்
சொக்கிவிழுந்தேன் அவள்மடியில் !
கூவியகுயிலாய் அவள்பேச
கூடியகாதலாய் இசைவுவர
தூவியமலரில் நடப்பதுபோல்
துள்ளிப்பறந்தது என்மனமே !
காந்தள்கைகளில் அவளணைக்க
கம்பன்கவியாய் இதழினிக்க
ஏந்தியேஅமுதம் உண்டதுபோல்
என்றன்நிலையும் ஆனதுவே !
தைமகள்வந்தாள் எழிலாக
தைதைஎன்றே நாள்குறித்தாள்
கையைபிடிப்பேன் உறுதியென்றேன்
களித்தாள் சம்மதம் எனப்பூத்தாள் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.