அம்மா அப்பா இல்லாத் தமிழ்க் குழந்தை
பாடத்தை நடத்துமுன்பு வீட்டுப் பாடப்
பயிற்சிதனை ஆசிரியர் காட்டச் சொல்ல
ஏடதனை மாணவர்கள் வரிசை யாக
ஏந்திவந்து காட்டிக்கை யெழுத்தைப் பெற்றார் !
வீடதனில் பாடத்தைச் செய்யா தோரை
விளித்திருக்கை மீதேறி நிற்கச் சொல்ல
கூடத்தில் நின்றவொரு சிறுகு ழந்தை
குனிந்துதலை அழுவதுபோல் காட்சி தந்தாள் !
முகவாட்டக் குழந்தையினை அருக ழைத்து
முகநகையில் செய்யாக்கா ரணத்தைக் கேட்க
அகந்தன்னில் அச்சந்தான் போன தாலே
அக்குழந்தை புரியவில்லை என்று ரைத்தாள் !
தகவாக ஆசிரியர் அம்மா விடத்துத்
தயங்காமல் ஏன்கேட்க வில்லை யென்றார்
முகம்வாட அழுதபடி அக்கு ழந்தை
முணுமுணுத்தாள் எனக்கம்மா இல்லை யென்றே !
அன்பாக ஆசிரியர் அப்பா விடம்நீ
அய்யத்தைக் கேட்டிருக்க லாமே என்றார்
முன்புரைத்த போலந்தக் குழந்தை அப்பா
முகத்தையே நான்பார்க்க வில்லை யென்றாள் !
இன்னுரையால் இதமாகப் பேசி வீட்டில்
இருப்பதுநீ யாருடனே என்று கேட்க
புன்னகையால் முகம்மலர மகிழ்ச்சி பொங்கப்
புகன்றிட்டாள் மம்மிடாடி யோடே என்று !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.