என் கனவு
ஆளரவற்ற நிசப்தம்
நிரம்பிய நீளிரவின்
நடுநிசிப் பொழுதில்
யாருக்கும் தெரியாதபடி
விம்மிக் கொண்டிருக்கிறது
என் கனவு.
வண்ணங்கள்
பூத்துக் குலுங்கும்
அக்கனவில் மேலும்
வண்ணங்களைக் கூட்டிக்
கொண்டிருக்கின்றன
மலர்வனமும்
வண்ணத்துப் பூச்ககளும்.
மலருக்கு மலர்
தாவித்தாவி அமர்ந்தாலும்
தன் காதலுக்கென
ஒரு மலரை மட்டுமே
கொண்டிருக்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்.
வேறு மனிதர்
ஒருவரும் நுழைய முடியாத
அப்பெருங்கனவில்
வண்ணத்துப் பூச்சிகளின்
சேட்டைகளை
நான் மட்டுமே ரசித்தபடி
இருக்கிறேன்.
இம்மகிழ்வை அனுபவிக்க
அவள்
உடனில்லாததைத் தவிர
என் கனவின்
விசும்பலுக்கான காரணம்
வேறென்னவாக
இருக்கக் கூடும்...?
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.