வீணாய்க் கழிகிறது
என்னிடமிருந்த
ஓர் ஒற்றைத் தீபத்தையும்
நீ பறித்துக் கொண்டாய்
இருள் மண்டியிருக்கும்
எனது பாதையில்
சுடரின்றி வழிதெரியவில்லை.
நறுமணம் பரப்பி
என்னைத் தழுவித்தொடும்
மலர்களையும்
நீயே பறித்துக் கொள்கிறாய்
ஒரு கணமும்
சும்மா இருக்கத் தெரியாத
இவ்வண்டம்
என் இயலாமையைக் கண்டு
நகைக்கிறது.
அடுத்தொன்றாய்
என்னிடமிருந்த
கண்கவர் வண்ணங்களை
மகிழ்ச்சி பொங்கப் பொங்க
நீயெடுத்துக் கொண்ட
பின்பு
சொல்லிப் பூரிப்பதற்கு
என்னிடத்தில்
வண்ணங்கள் ஏதுமில்லை.
அந்திமயங்கும் வேளையில்
இருள் வானெங்கும்
சுகமாய் மின்னிடும்
நட்சத்திரங்கள்
என் கண்களிலிருந்து
தாபத்தில் தரையிறங்கும்
கண்ணீர்த்துளிகள்
மரத்தில் பழுக்காத கனியாய்
என்னாசைகள்.
இப்பிரபஞ்சத்தில் நானும்
என்னிருப்பை
பதிவு செய்தாக வேண்டும்
சலனத்தில்
எவ்விதப் பிடிப்புமின்றி
வீணாய்க் கழிகிறது
என் வாழ்நாட்கள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.