சிக்கல் தீர்க்க சிறந்த வழி
இருபக்கம் மத்தளம்தான் அடிப டல்போல்
இடியாப்பச் சிக்கலுக்குள் மாட்டும் போதோ
உருவாகும் தடுமாற்ற மனத்தி னாலே
உருபடியாய் எதுவொன்றும் தோன்றி டாது !
பெருந்தாகம் எடுத்தபோது கானல் நீரைப்
பெய்தநீராய்ப் பருகுதற்கே அள்ளல் போல
அருவழியை ஆழமாகச் சிந்திக் காமல்
அறிவிலியாய் செயல்பட்டால்தீர்வுகிட்டா !
ஆத்திரந்தான் முன்தோன்றும்; எந்தப் பக்கம்
ஆப்பசைத்தால் விடுபடுவோம் என்றெண் ணாமல்
பாத்திரத்தில் தலைநுழைத்து மாட்டிக் கொண்ட
பரிதாபக் குரங்காவர் செயல்கள் செய்தால் !
மாத்திரைகள் எதுவென்று தெரிந்தி டாமல்
மயக்கந்தான் போவதற்கு விழுங்கல் போல
காத்திருக்க முடியாமல் செயல்கள் செய்தால்
கண்முன்னே வழியிருந்தும் புலப்ப டாது !
சிக்கல்தம் தன்மையினை ஆய வேண்டும்
சிறப்பாகத் தீர்க்கவழி காண வேண்டும்
விக்கலுக்கு நீர்தீர்வாய் ஆதல் போன்று
விடுபடற்குப் பொறுமைதான் ஏற்ற தீர்வு !
பக்கவிளை வில்லாமல் நோயைப் போக்கும்
பழமையான சித்தர்தம் மருந்தைப் போல
தக்கபடி காரணத்தைத் தெளிந்து செய்தால்
தளைதகர்ந்து சிக்கல்கள் தீர்ந்து போகும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.