நாட்டைக் காப்போம் நாமிணைந்தே...!
விடியலினை நம்நாடு பெறுவ தற்கே
விலையாகத் தம்முயிரை அர்ப்ப ணித்தும்
அடிபட்டும் உதைபட்டும் நம்முன் னோர்கள்
அருமையான சுதந்திரத்தை வாங்கித் தந்தார்
கடிவாளம் இல்லாத குதிரை யாக்கிக்
கண்டவர்கள் அதன்மேலே அமர்ந்து கொண்டு
குடியரசைத் தமதரசாய் மாற்றிக் கொண்டு
குடிமக்கள் தலையறுத்தார் ஆட்சி யாளர் !
அரசாங்கம் நமதாக இருப்ப தற்கே
ஆங்கிலேயத் துரைத்தனத்தை ஓட்டு தற்கு
விரலொடிய உடலொடிய உயிரை விட்டும்
விடுதலையை நம்முன்னோர் பெற்ற ளிக்கப்
புரவலராய் நாடுதன்னைக் காத்தி டாமல்
புறம்போக்காய் எண்ணியதைச் சுருட்டிக் கொண்டு
குரலெடுத்துச் சொல்லுதற்கும் விட்டி டாமல்
குடிமக்கள் நாவறுத்தார் ஆட்சி யாளர் !
ஆழமான பக்கியுடன் நாடு யர்த்த
அன்றிருந்த தலைவரெல்லாம் ஆட்சி செய்ய
ஊழலிலே இன்றிருப்போர் மிதக்க விட்டும்
உழைப்புதனை இலஞ்சத்தில் கூறு போட்டும்
வாழவழி இல்லாமல் மக்கள் தம்மை
வறுமையிலே துடிதுடிக்க வாட விட்டும்
தாழவைத்த கயவரினை ஓட்டி நாட்டைத்
தலைநிமிர்த்த சுதந்திரநாள் உறுதி ஏற்போம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.