கடவுளின் கேள்விகளும் குழந்தையின் பதில்களும்
வினோதமானது
விசித்திரம் நிறைந்தது
அரும்புக் குழந்தைகளின்
குறும்புக் கேள்விகள்.
அவை -
அர்த்தங்கள் புதைந்ததும்
சாமான்யத்தை
மீறியதும் கூட.
அவ்வளவு
எளிதில் அகப்படுவதில்லை
குழந்தைகளின் கேள்விகளுக்கு
பதில்கள்.
குழந்தைகளிடம்
சீரிய கவனத்துடன்
கையாளப் படுகின்றன
கடவுளின்
தேர்ந்தெடுக்கப் பட்ட கேள்விகள்.
கடவுளின்
கேள்விகளைத் தான்
நம்மிடத்தில்
ஒவ்வொன்றாய்
மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கின்றனர்
எப்போதும் குழந்தைகள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.