அலரவைக்கும் அடுக்குமாடிகள்

நெய்மின்னும் இனிப்புவகை அழகைப் போல
நேர்த்தியான வண்ணத்தில் வழவ ழப்பாய்
செய்தித்தாள் முழுபக்க விளம்ப ரத்தில்
சொக்கியது அடுக்குமாடி விற்ப னைதான்
வெய்யிலுக்கு நிழலைப்போல் சொந்த வீடு
வேண்டியோர்க்குத் தென்றலான தந்தச் செய்தி
கொய்திட்ட கனிகையில் கிடைக்கு மென்று
கொள்வதற்குச் சென்றிட்டார் பலரு மங்கே !
அன்பொழுகப் பேசினார்கள் அடுக்கு மாடி
அருமையினை மனமீர்க்கும் வகையில் சொன்னார்
பின்பெந்த வில்லங்கம் வாரா வண்ணம்
பிரித்துள்ளோம் மனையிடங்கள் என்று ரைத்தார்
நன்றாகப் பத்திரத்தைப் படித்த பின்பே
நறுந்தொகையை முன்பணமாய்க் கொடுங்கள் என்றார்
முன்பின்னே சிந்தித்தே சென்ற வர்கள்
முழுமனமாய்த் தொகைகொடுத்துப் பதிவு செய்தார் !
தங்களுடை விருப்பத்திற் கேற்ற வாறு
தம்வீட்டைக் கட்டுமாறு கேட்டுக் கொண்டார்
வங்கியிலே கடன்வாங்கி நகைகள் விற்றும்
வட்டிக்குப் பணம்பெற்றும் எடுத்து வந்தே
மங்கலமாய் அடுக்குமாடி உயர்தல் கண்டே
மனம்மகிழ்ந்து முழுத்தொகையைச் செலுத்தி னார்கள்
பொங்குமின்பில் திறப்புவிழா நடத்து தற்குப்
பொலிவாக அழைப்பிதழை அச்ச டித்தார் !
சுற்றத்தார் மனைசென்று அழைப்பைத் தந்தார்
சுற்றியுள்ள நண்பர்க்கும் செய்தி சொன்னார்
முற்றாக அழைப்பிதழ்கள் கொடுத்த பின்னர்
முன்னிரவு ஓய்வாக அமர்ந்த போது
புற்றிருந்து தலைநீண்ட நாகம் போல
புறம்போக்கு நிலத்தமைந்த அடுக்கு மாடி
விற்றதெனத் தொலைக்காட்சி செய்தி சொல்ல
விட்டனரே பலர்உயிரை ஏமாற் றத்தால் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.