தனித்தன்மைகள்
ஒருவருடன் ஒருவரினை ஒப்பு நோக்கின்
ஒப்புமையால் விளைவதெல்லாம் காழ்ப்பே யன்றோ
ஒருவரிடம் உள்ளகுணம் அவரின் பண்பு
ஒருவர்தம் தனிப்பண்பே அவரைக் காட்டும் !
இருவரிடம் ஒத்தபண்பு இருந்த போதும்
இருவருடை தன்மைகளும் ஒத்தி ராது
பெருமைமிகு இவ்வுலகில் ஒவ்வொன் றுக்கும்
பெயர்சொல்ல அடையாளம் இருக்க வேண்டும் !
இளங்கோவைக் கம்பனுடன் ஒப்பு நோக்கல்
இருவேறு துருவத்தை இணைத்தல் போலாம்
குளத்தோடு குளத்தையன்றி ஏரி போன்று
குளமில்லை எனப்பேசல் மடமை யன்றோ !
உளந்தன்னைத் தொடுகின்ற பாக்க ளுக்குள்
உள்ளசுவை வேறுவேறு இன்பம் வேறு
வளமான கூத்தன்போல் இல்லை யென்று
வசைபாடல் அறியாதான் கூற்றே யன்றோ !
முல்லைக்கும் மல்லிக்கும் மணமோ வேறு
முகிழல்லி தாமரைக்கும் அழகோ வேறு
வில்வயிலை புல்லுக்கும் குணமோ வேறு
விளையும்நெல் கம்புக்கும் சுவையோ வேறு !
நல்லதொரு கரையான்புற் றுக்கும் தேனீ
நறவுசேர்க்கும் தேனடைக்கும் நுட்பம் வேறு
எல்லோரும் அவரவரின் தன்மை யாலே
ஏற்றவர்தாம் அதையறிந்து போற்று வோமே!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.