பின்னடைவு...
எப்படைப்பாயினும்
மொழி எதுவாயினும்
அவசியமற்ற சொற்களை
நீக்கத்தான் வேண்டும்.
அச்சொற்களே படைப்பினை
வலுவிழக்கச் செய்கிறது.
சிக்கனமான சொற்களை
கொண்டு நேர்த்தியுடன்
வடிவமைக்கப்பட்ட
படைப்புகளைக் காலத்தால்
அழிக்க இயலுவதில்லை.
என்னுடைய மேசைத்தளத்தில்
அவசியமற்ற சொற்களின்
ஆக்கிரமித்தலை
அகற்றிய பின்னரே நான்
எழுத அமர்வது வழக்கம்.
அடித்தல் திருத்தலற்று
எழுதுவதுதென்பது
அவ்வளவு சிரமம்.
ஒவ்வொரு முறை
வாசிப்புக்குப் பின்பும்
என் அனுமதியின்றி நுழைந்த
அவசியமற்ற சொற்கள்
என் படைப்பாளுமையோடு
வலியப் போட்டிப் போடுகின்றன.
ஆதலினால்...
காலம் போற்றும் ஆகச்சிறந்த
படைப்பினைத் தருவதில்
எப்போதும்
ஒரு பின்னடைவு என்னில்
இருக்கத்தான் செய்கிறது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.