வாண்டுப் பிள்ளைகள்
ஆடாமல் அசையாமல்
இருக்கிறது வீடு.
முரண்டு பிடித்தழும்
அழுகை ஓசை
கேட்க வில்லை.
வெற்றிலைப் பாக்கு உரலை
பக்கத்திலேயே
வைத்திருக்கிறாள் பாட்டி.
தாத்தாவின்
நடைக்கம்பு குச்சி
இடம் பெயராமலிருக்கிறது.
போகோ கார்ட்டூன் பக்கம்
போகவேயில்லை
தொலைக்காட்சி ரிமோட்.
சிரிப்பின்றி முகத்தை
உம்மென்று வைத்திருக்கின்றன
அலமாரியில் பொம்மைகள்.
முத்தங்களுக்காக
வீட்டிலுள்ளவர்களின்
கன்னங்கள் காத்திருக்கின்றன.
குர்குரேவும் ஜெம்ஸும்
வாங்கி வைத்தது
அப்படியே மீதமிருக்கிறது.
வைத்த பொருட்கள்
அந்தந்த இடத்திலேயே
காணக்கிடக்கிறது.
கோடைவிடுமுறையில்
ஊருக்குப் போன
வாண்டுப் பிள்ளைகள்
வீடு வந்து சேர...
இன்னும்
ரெண்டு தினங்களே
பாக்கி இருக்கு.
எல்லாமும்
அதனதன் சுயத்தை
இழப்பதற்கு...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.