இசைந்தால் இருக்கும் என்னுயிர்
தென்றலாக வீசுகாற்றின் மொழியும் நீதான்
தெம்மாங்கு பாடுகின்ற இசையும் நீதான்
தென்னைமரத் தோப்பிருக்கும் குயிலும் நீதான்
தேன்சுவைக்க வரும்வண்டின் பாட்டும் நீதான்
மின்னலிடை மாதவிக்கை யாழும் நீதான்
மீட்டுகின்ற வீணையதன் நாதம் நீதான்
பன்னிசையே மேனியான பாவை நீதான்
பகருமுன்றன் இசைவினிலே வாழ்வேன் நான்தான் !
அரக்காம்பல் கூர்கொங்கை அழகு நீதான்
அனிச்சப்பூ இதழ்குழைத்த மென்மை நீதான்
விரலங்கை தனில்கொண்ட காந்தள் நீதான்
வீசுமுல்லை மணம்கமழும் குழலி நீதான்
வரம்பெற்ற வாசமலர் தாழம் நீதான்
வலைவீசி வீழவைக்கும் குவளை நீதான்
சரம்சரமாய் மலரணிந்த மங்கை நீதான்
சம்மதத்தைத் தந்திட்டால் வாழ்வேன் நான்தான் !
கனிமாவின் தோலெடுத்த சதையும் நீதான்
கருநாவற் பழத்திருக்கும் சுவையும் நீதான்
பனிக்குழைவில் தோய்த்தபலா சுளையும் நீதான்
பன்னீரில் குளித்துவந்த திராட்சை நீதான்
இனிக்கும்தோல் சூழ்ந்துளசெவ் வாழை நீதான்
இலைமறைத்தும் ஒளிர்கின்ற ஆப்பிள் நீதான்
கனிகளினை உடல்கொண்ட கன்னி நீதான்
காதலிக்கும் இசைவளித்தால் வாழ்வேன் நான்தான் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.