வெள்ளந்தி கிராமம்
அந்த ஊரின் ஒருபக்கத்தில்
இரட்டை இருப்புப்பாதையும்
மறுபக்கத்தில் நான்கு வழி
வேகச் சாலையும் செல்கிறது...
அந்த இருப்புப்பாதைகளில்
அதிவேக ரயில் வண்டிகள்
தடதடத்து ஊளையிட்டும்,
சாலைகளில் சொகுசு
வாகனங்கள் சீறிப்பாய்ந்தும்
ஊரைக் கடந்து
விரைந்தவண்ணம் இருக்கின்றன...
இரக்கமின்றிக் கடந்து
போகும் அவைகளை
ஏக்கத்துடன் பார்த்தவாறு,
பக்கத்து டவுணுக்கு இன்னமும்
பொடி நடையாகத்தான்
போய் வந்து கொண்டிருக்கிறார்கள்,
அந்த வெள்ளந்தி கிராம மக்கள்...
பொருள் விளக்கம்: வெள்ளந்தி = அப்பாவி எனப்படும் சாந்தமான குணமுடையோர்
- ஆதியோகி, திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.