சூழ்ச்சிகள் தாம் வென்றதுண்டா?
சூழ்ச்சிகள்தாம் வென்றதுண்டா அரக்கில் கட்டிச்
சுடர்நெருப்பில் மாளிகையை எரித்த போதும்
வாழ்விழந்து போயினரா பாண்ட வர்தாம்
வாழ்த்தொலிக்க மீண்டவர்கள் வெளியே வந்தார்
சூழ்ச்சிதனில் சிக்கவைத்துச் சகுனி கையால்
சூதாடி நாடுதன்னைப் பறித்த போதும்
தாழ்ந்திட்டோம் எனமனந்தான் தளர்ந்தி டாமல்
தகுவீரம் காட்டிநாட்டை மீட்டெ டுத்தார் !
கூனியவள் சூழ்ச்சியாலே நாட்டை விட்டுக்
குடிபெயர்ந்தே இராமன்தான் காடு சென்றும்
மானினமாய் மாரீசன் சூழ்ச்சி செய்ய
மாவரக்கன் சீதைதனைத் தூக்கிச் சென்றும்
வானில்போர் செய்தரக்கர் சூழ்ச்சி யாலே
வலக்கையாம் லட்சுமணனை மயங்கச் செய்தும்
தேனினிய மனையாளை மீட்டெ டுத்தே
தெள்ளியதன் வீரத்தால் நாட டைந்தான் !
பொற்கொல்லன் சூழ்ச்சியாலே பாண்டி யன்தான்
பொய்நீதி கூறியுயிர் எடுத்த போதும்
பொற்செல்வி கண்ணகியாள் திறமை யாலே
பொலிந்ததுவே மதுரைதனில் உண்மை வென்று
எற்றைக்கும் சூழ்ச்சிகளோ வென்ற தில்லை
ஏமாற்றி வாழ்ந்தவர்கள் எங்கு மில்லை
உற்றதொரு நேர்வழியில் உழைப்ப வர்தாம்
உலகத்தில் புகழ்பெற்று நிலைத்தி ருப்பர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.