காலச் சுழற்சி
என் தாத்தா
நிறைவேற்றாத கடமைகள்
எல்லாமும்
இன்றென் தந்தையின்
கடமையாகி விட்டது.
எல்லோரையும்
கடமை நாற்காலியில்
சுழற்றியமர வைக்கிறது
காலச் சக்கரம்.
படுக்கையறையிருந்து
பக்குவமாய் வராண்டாவில்
பாய்விரித்துக் கொள்கிறது
முதுமை.
அதற்குத் தக
இசைகிறது வயோதிக மனசும்.
என் தாத்தா
நிரப்பாத கோடிட்ட இடங்களை
என் தந்தை
தாத்தாவாகும் காலத்தில்
நிரப்பிடுவார்.
என் தந்தை
நிரப்பாமல் விட்ட வெற்றிடங்களை
நான் நிரப்பியாக வேண்டும்.
என் படுக்கை
வராண்டாவிற்கு வரும்
அக்காலம் வரை
காத்திருக்கப் போவதில்லை.
என் கடன்
பணி செய்து கிடப்பதே...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.