தன்னலமின்றி வாழ்ந்து பழகு...!
கடைசியாய் அனுப்பிய
ஒற்றைச் சொல்லில்தான்
நான் இன்னமும்
இருந்து கொண்டிருக்கிறேன்...
கால்வாயில் இறங்கவே
பயப்படுகிறவனுக்குக்
குளத்தின் ஆழம் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
அவன் கடலில் மூழ்கி
முத்ததெடுக்கப் போவதும் கனவுதான்...
தலைக்கவிழ்ந்த கதிர்களை
நோட்டமிடும் நீ
தானியமாகிடுவாயா என்ன?
மருந்து மாத்திரைகளை
உண்டுதிளைக்கும்
இரசாயன மனிதனாயிற்றே நீ...
கைகொட்டிச் சிரிக்க
அனுமதி கோரி நிற்பவனால்
எந்தவொரு முடிவையும்
சுயசிந்தனையோடு எடுக்க
முடியாதென்பதை எப்போது நீ
தெரிந்து கொள்ளப் போகிறாய்...?
வேர்செத்த மரங்கள்
பூப்பதுமில்லை காய்ப்பதுமில்லை
அதன் கருணை மனதினை
பூமியறியாமலே மடிந்துதான் போகும்
ஆமாம்...
உனதந்த
ஒற்றைச் சொல்லெடுத்துக் கொண்டு போகிறேன்.
நான் திரும்புவதென்பது
காலத்தின் கைகளில் பூரணமாய்
இருக்கிறது...
போனவன் கதை
போனதாகவே இருக்கட்டும்.
இனியாவது மனிதநேயத்துடன்
வாழப் பழகிக்கொள்...
சுயநலமற்றவர்கள்
இங்கு மிகவும் குறைவு.
மரங்களைப்போல் தன்னலமின்றி
வாழ்ந்து பழகு...
உன்னை நாளைய வரலாறு பேசும்.
நீயே வரலாறுமாவாய்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.