குழந்தைத் தொழிலாளர்

கதிர்முளைத்து வருமுன்னே கண்வி ழித்துக்
கலையாத தூக்கமுடன் உடலும் சோர்ந்து
முதிராத மனங்களிலே சுமையைத் தாங்கி
மூண்டுவரும் பசிநெருப்பைத் தணிப்ப தற்கே
சுதிசேர்த்துப் பெற்றோரின் வறுமைப் பாட்டின்
சுருதியாக உடன்பாடச் செல்லு கின்ற
கதியில்லா இளஞ்சிறார்கள் பாடு தன்னைக்
கண்கொண்டு பார்ப்பவர்கள் யாரே உள்ளார் !
அழகான சீருடையில் அகவை யொத்த
அருஞ்சிறார்கள் பள்ளிசெல்லும் காட்சி கண்டே
நிழலான வறுமையினால் குடிசைக் குள்ளே
நின்றவனோ ஏக்கத்தில் சாம்பு கின்றான்
குழவியர்க்குக் கட்டாயக் கல்வி யென்றே
குறித்துள்ள சட்டங்கள் இங்கி ருந்தும்
விழலுக்கே இறைக்கும்நீர் போல வன்றோ
விதிகளெல்லாம் செயலின்றித் தூங்கு திங்கே !
நூல்களினைச் சுமக்கின்ற பிஞ்சுக் கையால்
நுழைந்துள்ள ஏழ்மையினால் மண்சு மந்து
கால்தேயச் சிற்றாளாய்க் கல்சு மந்து
கந்தகத்தை உடல்சுமந்து மேனி யெல்லாம்
தோல்கறுக்கச் சூரியனின் வெயில் சுமந்து
துவளுகின்ற சோர்வுதனை மனம் சுமந்து
பால்முகமோ பரிதாப முகமாய் மாறப்
பாரத்தைச் சுமக்கின்றார் சமுதா யத்தால் !
பிஞ்சுவிரல் அவெழுதிக் கல்வி கற்கப்
புத்தகங்கள் புரட்டுகின்ற வயதில் தீயாய்
நஞ்சுமிழும் வறுமையெனும் கொடுமை போக்க
நாளெல்லாம் தீக்குச்சி அடுக்கு கின்றார்
பஞ்செனவே பறந்துவிளை யாடு கின்ற
பருவத்தில் நான்குசுவர்க் கட்ட டத்துள்
குஞ்சுகளாய்ச் சிறகிருந்தும் விரிந்தி டாமல்
குமைகின்றார் ஏழ்மையினால் உடலு ழைத்தே !
மத்தாப்பூ சிரிப்புதிர வகுப்ப றையில்
மகிழ்ச்சியுடன் குறும்புபல செய்து கல்வி
முத்துகளை ஆசிரியர் கோத்த ளிக்க
முகிழ்க்கின்ற அறிவுமாலை அணியும் காலம்
சித்திரமாய் அமர்ந்துவிரல் மருந்தை அள்ளச்
சிதறுகின்ற பட்டாசு செய்யு கின்றார்
சொத்தாக வறுமையினைப் பெற்ற தாலே
சொத்தையாகி வேகின்றார் தொழிற் கூடத்தில் !
சொல்லமுதாய் நாபேசிச் சிறக டித்தே
சுதந்திரமாய்ப் பறக்கின்ற பள்ளிக் காலம்
கல்லுடைக்கும் அடிமையராய் மலையின் ஓரம்
காட்டிற்குள் மறைவாக வாடு கின்றார்
சொல்லிழந்து கைகட்டிப் பண்ணை வீட்டில்
கொத்தடிமை யாய்அப்பன் கடனுக் காகக்
புல்வெட்டி மாடுமேய்த்தே புதரைப் போலப்
புரியாமல் அடிமாடாய் வாழு கின்றார் !
சாலையிலே தாள்பொறுக்கி வீடு கட்குச்
செய்தித்தாள் எடுத்தேகிப் பலரின் வீட்டில்
காலையிலே வீட்டுவேலை துணிது வைத்துக்
கடைகளிலே எடுபிடியாய் வேலை செய்து
பாலையிலே காணுகின்ற கானல் நீராய்ப்
பகற்கனவில் எதிர்கால வாழ்வை எண்ணி
நாளையிந்த நாடாளும் சிறார்க ளெல்லாம்
நாளெல்லாம் உழைக்கின்றார் கல்வி யின்றி !
சேய்களுக்குக் கட்டாயக் கல்வி என்னும்
செயல்பாட்டில் கடுஞ்சட்டம் வருதல் வேண்டும்
தாய்தந்தை படும்துயரைக் களையு கின்ற
தகுதிட்டம் அரசிங்கே நடத்த வேண்டும்
வாய்ப்பளிக்கும் இலவசங்கள் முறையாச் சென்று
வளர்கல்வி பெறுதற்கே உதவ வேண்டும்
தூய்மையான தொண்டுள்ள நிறுவ னங்கள்
துணையாகிக் குழந்தைகளைப் பேண வேண்டும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.