உழைப்பாளி
நெல்குவித்து வறுமையினை ஓட்டு கின்ற
நிறையுழைப்பு உழவரினைப் போற்று வோமே
கல்மண்ணைச் சுமந்துபெருங் கட்ட டங்கள்
கட்டும்தொழி லாளரினைப் போற்று வோமே
நல்வளத்தைத் தொழிற்சாலை தனிலு ழைத்து
நல்குகின்ற தோழரினைப் போற்று வோமே
வெல்கின்ற அறிவியலில் நாடு யர்த்த
வினையாற்றும் அறிஞரினைப் போற்று வோமே !
தலைக்கூடைச் சுமையோடும் இடுப்பில் பெற்ற
தன்குழந்தை சுமையோடும் கீரை விற்போள்
தலையினிலும் முதுகினிலும் மூட்டை தூக்கித்
தள்ளுவண்டி பாரத்தை இழுக்கும் கூலி
வலையோடே உயிர்க்குறுதி இல்லா போதும்
வாரிதியில் போராடும் மீன வர்கள்
விலைமதிப்புத் தன்னுழைப்புத் தோழர் தம்மை
விரலிணைத்துக் கைகுவித்து வணங்கு வோமே !
உடலுழைப்பில் உழைத்தாலும் மதியு ழைப்பில்
உழைத்தாலும் உழைக்கின்ற வர்கத் தாரின்
உடலுழைப்பை மதியுழைப்பைச் சுரண்டு கின்ற
உன்மத்தர் தமைவீழ்த்தி உழைக்கும் தோழர்
முடமாகிப் போகாமல் வாழ்வில் நல்ல
முன்னேற்றம் காண்பதற்குத் துணையாய் நின்று
நடமாடும் இறையிவர்தாம் என்றே நாளும்
நாம்போற்றி மதித்தன்பால் வாழ்த்து வோமே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.