நேர்மைக்குப் பரிசு!
நல்லுள்ளம்
கொண்ட அம்மனிதரால்தான்
ஆமைவேகத்திலேனும் நகர்கிறது
என் அவசர வாழ்வு.
அன்றொரு நாள் என்னிடம் அகப்பட்டது
அம்மனிதர் தவறவிட்ட பொருளொன்று.
அப்பொருள் அவருடையதென்று
நிச்சயமாகத் தெரியும் எனக்கு.
என்னிடம் அகப்பட்டது
அம்மனிதருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
அப்பொருளைத் தொலைத்ததற்கான
பரபரப்போ பதற்றமோ
அவரிடத்தில் துளியுமில்லை.
அதனால்
அவரென்னைச் சந்தேக
வட்டத்திற்குள் திணிக்கவில்லை.
எனினும்...
அஞ்சுகிறேன் நான்.
அந்நாளின்
என்னவசரத் தேவைக்கு
அவர் தவறவிட்டப் பொருளின்
மதிப்பு
எனக்குப் போதுமானதாக இருக்கிறது.
என் நேர்மையைப் பலமுறை
அவர் அறிந்திருக்கிறார்.
அன்றைய அதிருஷ்டத்தை
மனிதத்தின் நியதியறிந்து
நன்றிக் கடனாய் அப்பொருளை
அவரிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன்.
தொலைந்த பொருளை
என் கையில் வியப்புடன் பார்த்த
அம்மனிதர்
என் வறுமை நிலையறிந்து
இன்ப அதிர்ச்சியாய்
அப்பொருளை எனக்கேப்
பரிசளிக்கிறார்.
நான் நிராகரித்தும்
அவரென்னை விடுவதாயில்லை.
என் நேர்மையின் நிரூபணம்
அன்றைய என் அவசர வாழ்வை
இளமைக் கால ஆமையின்
துள்ளல் வேகத்திற்கு
இனிதே பயணித்தடக்கியது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.