எம் நட்பு.
சின்னச் சின்னக் கதை பேசி
சிரித்து மகிழ்வதற்காய்
சென்ற பல பொழுதுகளில்
சேர்ந்திருந்தோம் நாம்...!
சொந்த பந்தம் எதுவுமின்றி
சொந்தக் கதை பல பேசி
நித்தம் நித்தம் நீண்ட தூரம்
நினைவுகள் பல பகிர்ந்தோம்...!
நோயுற்ற நேரத்திலே
நேரம் காலம் பார்க்காது
நேர்த்தியுடன் என்னருகே
நீ இருந்தாய் ஆறுதலாய்...!
உன் சுமைகள் உட் புதைந்தே
என் பாரம் தோள் தாங்கி
ஏற்றம் காண்பதற்காய்
என்னுடனே உழைக்கின்றாய்...!
சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேதுமின்றி
பாதுகாப்பதற்காய்...!
பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனேக் கதை பேசி
வெட்டிச் செல்ல நினைத்தாலும்
ஒட்டியேப் போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!
உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.