இயல்பாய் இருந்து கொள்கிறேன்
கோடைச்சூடு தோலுரிக்கும்
அவ்விரவில்
இருளுடுத்திய ஆகாயம் போல்
போர்வையை
இழுத்துப் போர்த்திக் கொள்ள
குளிர் அதிகமாக இருந்ததெனக்கு.
கோடைச்சூட்டின்
வெம்மைத்தாளா இரவுநேரத்து
மனிதர்கள்
அவர்த்தத்தம் குறிகளை மட்டுமே
மறைத்தபடி இருக்கிறார்கள்.
கருப்பட்டி கலக்காத
கருங்கசாயத்தை ஆத்தா
கைப் பக்குவத்தில் குடித்து முடித்த
சில கணங்களுக்குள்
என் தேகமெங்கும்
குபீரென்று பூக்கத் தொடங்குகின்றன
வியர்வைப் பூக்கள்.
அந்நள்ளிரவு முதல்
பின்னிரவு அதிகாலை வரையில்
சகமனிதர்களைப் போல்
குறிகளை மட்டுமே மறைத்தபடி
நானும்
இயல்பாய் இருந்து கொள்கிறேன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.