தாமரை மலரினும் தண்ணியள் அவள்!
(திணை - குறிஞ்சி, கூற்று - தலைமகன் கூற்று. தன் காதலை உறுதிபட உரைத்து மடலேறுவேன் என்பது படச் சொல்லியது)
தேனினும் இனிய திருந்திய செம்மொழி
அமிழ்தினும் ஆன்ற மழலை மென்குரல்
முதிர்ந்த முக்கனி தீஞ்சுவை இதழினாள்
சிலவே மொழியும் மெல்லியல் சிறுமகள்
புலம் வாடு நாவின் அருந்துயர் களையும்
தண்ணளி வெள்ளருவி அனைய உறவினள்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் இணையினராவோம்
திலகம் இட்ட இளம்பிறைத் திருநுதல்
தாமரை மலரினும் தான் மிகப் பொலிந்தவள்
எல்லில் அலரும் மௌவலின் நறியள்
இரவிலும் ஒளிரும் ஒண்சுடர் மேனியள்
தாயினும் பரிந்த தன்மையள்
தன்நோய்க்குத் தானே மருந்தாவாள்
குவளை நீர்வார் நிகர்மலரன்ன
பேரமர் மழைக்கண்ணாள்
நீர்மலி கண்ணொடு நேர் வருவாளெனின்
நடுநா அற்ற கொடுமணிபோல
பெருந்துயர் விளைக்கும்
இம்மைமாறி மறுமை ஆகினும்
இவளன்றி இன்னுயிர் இயைவதில்லை
காலை நண்பகல் கையறுமாலை
ஊர்துஞ்சு யாமம் உலகொளிர் விடியல்
அரும்பொழுது ஐந்தும் அவளுடன்
கழிக்கும் நல்லோள் கணவன்
நானெனக் கூறும் நாளொன்று
விடுவிசைக் குதிரை விரைவொத்து வேண்டும்
நேரிறை முன்கை பற்றி
அவளின் நேரியன் நானாவேன்
என் நாரியள் அவளாவாள்
இசையீராயின்...
மாவென மடலும் ஏறுவேன்
பூவென எருக்கங் கண்ணியும் சூடுவேன்.
- தவ. திரவிய. ஹேமலதா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.