நிறத்தினிலே வேற்றுமை வேண்டா
நிறவெறியின் வேற்றுமையால் ஆப்ரிக்காவில்
நின்றிருந்த காந்தியினை உதைத்தார் எட்டி
அறவழியில் வள்ளியம்மை எதிர்ப்பைக் காட்ட
அவ்வெதிர்ப்பே காந்திக்கு வலிமை சேர்க்கச்
சிறப்பான அகிம்சையெனும் வழியைக் கண்டார்
சிதைந்ததங்கே நிறம் வெறுத்த வேற்றுமைகள்
மறவனவன் மண்டேலா சிறையிருந்தே
மாய்த்திட்டார் நிறத்திமிரைப் பொதுமை செய்தார் !
உலகத்தை ஆட்டுகின்ற அமெரிக்காவில்
உலவிட்ட நிறவெறியின் வேறுபாட்டைப்
பலவகையில் போராடி மார்டின் கிங்தாம்
பார்போற்ற நீக்கியதால் கறுப்பரங்கே
வலம் வந்தார் மிகச்சிறந்த அதிபராக
வரலாற்றைப் புதியதாக எழுத வைத்தார்
கலந்ததுவே நிறங்களங்கே! மனிதம் பூத்தே
காட்டாகத் திகழ்கிறது உலகிற்கின்று !
மொழிவேறு இனம்வேறு உணவுவேறு
மொழிகின்ற பண்பொழுக்கம் வேறாய் நின்று
வழிவழியாய்த் தனித்தாண்ட நாட்டையெல்லாம்
வகை மாற்றி ஒரு நாடாய் ஆக்கும் போது
வழிமாறிப் போகாமல் அனைவர் ஒன்றாய்
வரைந்திருந்த நிறம் நீக்கிச் சேர்ந்ததாலே
விழியுயர்த்தி உலகமெல்லாம் வியந்து நோக்க
வீறுடனே திகழ்கிறது இந்தியாவாய் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.