மகளுக்கு ஒரு கடிதம்
பாரதியார் வாழ்ந்திட்ட காலம் தன்னில்
படிப்பறிவு இல்லாமல் இருந்தார் பெண்கள்
சாரதியாய் ஆண்கள் தாம் ஓட்டுகின்ற
சாய்ந்தாடும் தேராக இருந்தார் பெண்கள்
ஊரறியப் பார்த்திடாத முகமாய் வீட்டின்
உள்ளடுப்புப் புகைக்குள்ளே இருந்தார் பெண்கள்
தாரணிந்த மணமகளாய்ப் பிள்ளை பெற்றுத்
தருகின்ற எந்திரமாய் இருந்தார் பெண்கள் !
சீர்திருத்தக் கருத்துக்கள் பிறந்ததாலே
சிறப்பாகப் பகுத்தறிவு வளர்ந்ததாலே
ஊர்க்குள்ளே பெண்கள் தம் மனத்திற்குள்ளே
உருவான புதுமாற்ற எழுச்சியாலே
பார்வியக்கப் பெண்கள்தாம் கல்விகற்றார்
பட்டங்கள் பெற்றுயர்ந்த பதவி பெற்றார்
நேர்நின்றே ஆண்களுடன் சமமாய் ஆகி
நேரிய விண்வெளி தனக்கும் சென்றுவந்தார் !
காலத்தின் மாற்றத்தால் கிராமமெல்லாம்
கண்போன்ற இயற்கையினை இழந்த போல
கோலத்தில் பெற்ற பெண்கள் மாற்றத்தாலே
கோணலாகிக் குடும்பந்தான் போயிடாமல்
பாலமாகக் குடும்பத்தைக் கட்டிக்காத்த
பாசமுடன் அன்றிருந்த பெண்கள் போல
சீலமுடன் மகளே நீகாக்கும் போதே
சிறந்திருக்கும் வீடும் நம்நாடுமிங்கே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.