பாரியன்பன் கவிதைகள்
சருகான இலைகளுக்கு
இல்லவே இல்லை
வேரின் நீர்க் கடத்தல்.
*****
முள் முளைத்த பின்பு
பூத்த ரோஜாவில் இல்லை
முள்ளின் வாசம்.
*****
வாட வாட
வலிமை கூடுகிறது
முள்.
*****
மருத்துவருக்கு மருத்துவரும்
முள்ளுக்கு முள்ளும்
எப்போதும் வேண்டும்.
*****
மரணம் வரை
மணம் வீசிக்கொண்டிருக்கும்
மலர்கள்.
*****
நீரின்றி ஒளிராது
திரியின்றி எரியாது
தரை நட்சத்திரங்கள்.
*****
உனக்கான பின்னரே
எனக்கு
நானாகிறேன் நான்.
*****
பிடியற்ற கத்திக்கு
எடுத்த "கை''
பிடியானது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.