இலவயம் என்னும் தூண்டில்
இலவயங்கள் மக்கள்தமை மயங்கச் செய்தே
இயல்பான வாழ்க்கையினை முடக்கிற் றின்று
இலவயங்கள் உழைக்கவேண்டும் என்று நெஞ்சுள்
இருந்திட்ட ஆர்வத்தைக் குலைத்த தின்று
இலவயங்கள் மடியினையே உடலி லேற்றி
இரவாகப் பகலினையும் மாற்றிற் றின்று
இலவயங்கள் அரசியலின் கட்சி முன்பு
இரவலராய்க் கையேந்த வைத்த தின்று !
வரிப்பணமோ உற்பத்தி பெருக்கி நாளும்
வளம்பெருக்கி நாடுதனை உயர்த்த வேண்டும்
வரிப்பணத்தில் தொழிற்சாலை கட்டு வித்தால்
வறுமையோட்டிச் செல்வத்தைக் குவிக்கு மன்றோ
புரிந்திருந்தும் வாக்குகளைப் பெறுவ தற்கே
புரையோடிக் குமுகத்தை அழுக வைத்தே
அரிப்பெடுத்துச் சொறியவைக்கும் இலவ யத்தை
அளித்தின்று வரிப்பணத்தை பாழ்செய் கின்றார் !
இலவயங்கள் அறிவிக்கும் கட்சி கட்கே
இல்லையிடம் எனஒதுக்கி ஓட வைப்போம்
நிலத்தினிலே வியர்வைநீர் பாய வைத்து
நிறையுழைப்பில் வளங்களினைப் பெருக வைப்போம்
நலமாக நாட்டுமக்கள் வாழ்வ தற்கே
நாளைபயன் தரும்திட்டம் செய்ய வைப்போம்
பலருமொன்றாய்க் கைகளினைச் சேர்த்து ழைப்பால்
பாடுபட்டு வாழ்வதற்கே உறுதி ஏற்போம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.