கயிறுதனைத் திரிக்கின்றார்
தூங்குகின்ற சமுதாய அமைதி யாலே
தொடைகளிலே கயிறுதனைத் திரிக்கும் வேலை
பாங்காக அரசியலார் செய்கின் றார்கள்
பார்த்திருந்தும் கேட்கின்ற துணிவு யின்றி
மூங்கையராய் இருப்பதாலே முனைந்து யிங்கே
முட்டாள்கள் நாமென்றே சுரண்டு கின்றார்
ஏங்கிநிதம் நாம்பார்க்க நம்கண் முன்னே
எடுக்கின்றார் நம்பணத்தை ஏய்க்கின் றார்கள் !
வன்முறையை வளர்க்கின்றார்; வலிமை யாலே
வாக்களித்த மக்களினை மிரட்டு கின்றார்
தன்சொத்தாய்ப் பிறர்சொத்தைப் பேணு கின்ற
தாராள மனம்படைத்தார்; தீட்டும் திட்டம்
தன்வீடு அடைதற்கே வழிச மைத்தார்
தடையின்றி அடியாட்கள் அதிகா ரத்தால்
தன்னாட்சி தொகுதியிலே நடத்து கின்றார்
தடுக்காத அமைதியாலே தழைக்கின் றார்கள் !
எங்கெங்கும் கையூட்டே ஏற்றம் பெற்று
ஏளனமாய் நேர்மையினை ஏய்க்கும் காட்சி
தங்குதடை இல்லாமல் ஊழ லாறு
தரித்திரத்தை வளர்த்தபடி பாயும் மாட்சி
கங்குலிலே நடக்கின்ற வணிகம்; நாட்டைக்
காசுக்கு விற்கின்ற கயமை கண்டும்
பொங்காமல் அமைதியாகப் போவ தோநாம்
பொறுமையினை விட்டெழுந்தே செய்வோம் மாற்றம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.