வெற்று வானம்
எல்லா தெய்வங்களுக்கும்
சாந்தி செய்தாயிற்று
உக்கிரம் இன்னும் தணிந்தபாடில்லை
ஒரு துளி நீரேனும்
உதிரும் சூழல் இல்லை
நீர்நிலைகளில் நிறைந்திருக்கும்
காங்கிரீட் பயிர்களின்
இராட்சச வேர்கள்
வேகும் பூமியின் நாபி வரைச் சென்று
நீர் குடித்த பிற்பாடு
குருதி குடித்துக் கொண்டிருக்கின்றன
வெப்பத்தியின் வீதியில்
மரங்கள் கரிந்து கொண்டிருக்க
கிளை தங்கிய பறவையின்
இறகுகள் எரியத் தொடங்கின
மனிதம்
செய்வதறிந்தும்
செய்வதறியா சித்தப் பிரம்மையோடு
பெருமூச்செறிந்தபடி
வெற்று வானத்தை
வெறித்துச் சோர்கிறது.
- முனைவா் பொ. திராவிடமணி, தஞ்சாவூா்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.