தோல்வியே வெற்றி
தோல்வி என்பது தோல்வி யன்று
தோல்வி கண்டு துவளல் விட்டே
தோல்வி தன்னை வெற்றிப் படியாய்த்
தோற்றோர் எண்ணிடில் அடுத்து வெற்றியே !
வெற்றி பெற்றால் நெஞ்சை நிமிர்த்தி
வெற்றி என்னால் விளைந்தது என்போர்
வெற்றி இன்றி தோல்வி வந்தால்
வேற்றவர் மீது பழியை ஏற்றுவர் !
தோல்வி வருவது நம்மால் அன்றித்
தோல்வியை யாரும் திணிப்ப தில்லை
தோல்வி என்று நம்மின் ஆசை
தோற்கும் போது நாமே நினைப்பது !
திட்ட மிடலில் குறைகள் இருந்தால்
தீட்டிய திட்டம் செயலில் குறைந்தால்
வட்ட மடித்தே தோல்வி வந்து
வகையாய் நம்மின் தோளில் அமரும் !
தோற்கும் போதே எதனால் தோற்றோம்
தோல்வி நிகழ்ந்த தெவ்வா றென்றும்
ஆற்றிய பணியில் செய்த பிழையை
ஆய்ந்து தெளிந்தால் வருமே வெற்றி !
உளியால் செதுக்கச் செதுக்கத் தானே
உருண்ட கல்லும் சிலையாய் மாறும்
துளிகள் எல்லாம் சேர்ந்தால் தானே
துடிப்பாய் ஓடும் ஆறாய் மாறும் !
வெற்றுப் புகழை உதறித் தள்ளி
வெற்றி யொன்றே குறிக்கோ ளாகக்
கற்கும் அனுபவம் பாதை யாக்கிக்
கடப்போர் வெற்றியைக் காண்பர் நன்றே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.