சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...!
ஒரு பெருங்கோடை
பெயர் தெரியாத மரத்தடியில்
நிழலுக்காக ஒதுங்கிய
வழிப்போக்கன்
ஒருவன்
நிழலின் குளிர்ச்சியில்
வெயிலின் தாக்கத்திற்கான
காரணத்தை அறிய
முற்படுகிறான்.
தீர்வை எதிர்நோக்கி
அதை
கண்டறிந்த வேளையில்
அவன்
தலைக்குப் பின்னால்
ஒளிர்கிறது ஒளிவட்டம்
இப்போதந்த வழிப்போக்கன்
புத்தனென்று அழைக்கப்படுகிறான்
அவனுக்கு
ஞானத்தைப் போதித்ததால்
பெயர் தெரியாத
அம்மரத்தை
எல்லோரும்
போதி மரமென்று
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.