என்னைத் தாலாட்ட வருவாயா?
என்தந்தை குழந்தையாக இருந்த போதோ
என்பாட்டி தன்முலையில் பாலை ஊட்டித்
தன்னுடனே பிறந்ததம்பி தந்த தொட்டில்
தனில்கிடத்தித் தந்தையிவர் என்று காட்டி
அன்பான உறவுகளின் பெயர்கள் சொல்லி
அவர்களீந்த சீர்களினை எடுத்துக் கூறிப்
பொன்தமிழில் தாலாட்டை இசைத்த போல
பொலிதமிழே வருவாயா எனைத்தா லாட்ட !
பனிபடர்ந்த இளங்காலை பசுமை கொஞ்சப்
படர்ந்திருந்த வயல்வெளிகள் தென்னந் தோப்பு
கனிதொங்கும் மரங்களிலே கிளிய மர்ந்து
கடித்தஅணில் பழங்களினைக் கொத்திப் பார்க்க
இனிமையாகப் பூத்திருக்கும் மலர்கள் தேடி
இசைவண்டு செல்லல்போல் சென்ற ணைத்த
நனிதூய்மை தென்றலேநீ தந்தை மேனி
நனைத்தபோல வருவாயா எனைத்தா லாட்ட !
சுற்றத்தார் புடைசூழ கிராம மெல்லாம்
சுற்றிநின்று நலம்கேட்க; ஓடை தன்னில்
வற்றாமல் வரும்தண்ணீர் சலச லக்க
வானுயர்ந்த வெற்பிருந்து கதிர்கள் வீச
நற்றாயே குழந்தையினை மடிவ ளர்க்க
நல்லகதை பாட்டிதாத்தா எடுத்துச் சொல்லப்
பொற்காலச் சங்கத்துப் பண்பாட் டோடு
பொலிவாழ்வே வருவாயா எனைத்தா லாட்ட !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.