இலக்கியங்கள் கூறும் வீரம்

அகமென்றும் புறமென்றும் வாழ்க்கை தன்னை
அருமையாக வகுத்தவர்கள் தமிழர் தாமே
அகந்தன்னை ஐந்திணையில் உலவ விட்டார்
அரும்புறத்தை எண்திணையில் முழக்க விட்டார்
தகவுடனே களவுதனில் காண வைத்துத்
தகுதியுடன் கற்பினிலே இணைய வைத்தார்
முகம்மார்பில் விழுப்புண்கள் பெற்றவர் தாம்
முழுவீரர் எனப்புகழ்ந்தே உச்சி மோந்தார் !
காதலுக்கு இலக்கணத்தை வகுத்த போன்றே
கனல்கின்ற போருக்கும் நெறி வகுத்தார்
மோதலுக்குச் செலும் முன்பு ஊரிலுள்ள
முதியோர்கள் நோய்யுற்றோர் குழந்தை பெண்கள்
சாதலுகே ஆளாக நேரு மென்று
சாற்றியவர் வெளியேறிச் சென்ற பின்பே
தீதன்னை விழியேற்ற வீரரெல்லாம்
திண்தோளால் நேர்க்கு நேராய்ப் போர்செய்தார்கள் !
வெட்சிக்குப் பின்கரந்தை வஞ்சிக்குப் பின்
வெறியோடு வரும்பகையைத் தடுக்கும் காஞ்சி
நெட்டுயர்ந்த மதில்காக்கும் நொச்சிக்குப் பின்
நெடுமதிலை வளைத்துப் போர்செய்யும் உழிஞை
எட்டி நின்று பார்த்திட்ட வீரரெல்லாம்
எதிரெதிரே வாள்சுழற்றி மோதும் தும்பை
வெட்டிமுகம் மார்பினிலே விழுப்புண் பெற்று
வெற்றிபெறும் வாகையென நெறி வகுத்தார் !
கோட்டையினைச் சுற்றி பெரும் அகழியோடு
கொடும் விலங்கு உலவுகின்ற காவற்காடும்
கோட்டையின் மேல் அம்பெய்யும் எந்திரங்கள்
கொத்துகொத்தாய்க் கல்லெறியும் கவணை வைத்தும்
நீட்டியுடல் அறுக்கின்ற பொறிகளோடே
நீள்கழுத்தை திருகும் ஐயவிதுலா வைத்தும்
நோட்டமிடும் கண்களினைத் தாக்கிக் குத்தி
நோய்செய்கிச் சிலிவைத்தும் காவல் காத்தார் !
போர்க்களம் தான்செலும் முன்பு வீரரெல்லாம்
பொருதுபகை வென்றிடுவோம் என்றே ஒன்றாய்ச்
சேர்ந்து நின்று வஞ்சினந்தான் உரைப்பதோடு
செற்றார்முன் தோற்றாலோ மனைவி விட்டும்
ஊர்விட்டும் உறவைவிட்டும் செல்வோ மென்றும்
ஊர்மக்கள் இழிவாகத் தூற்றி எம்மின்
நேர்நின்று உமிழ்க வென்றும் முழக்கமிட்டே
நெஞ்சுயர்த்திக் களம் புகுவர் அச்சமின்றி !
போர்க்களத்தில் தன்தந்தை வீழ்ந்த பின்பு
போர் செய்ய கணவனையே அனுப்புகின்றாள்
மார்பினிலே பாய்ந்து வந்த அம்பு தைத்தும்
மண்காக்கப்பகை வீழ்த்திக் கணவன் வீழப்
போர் செய்யப்பால் முகத்துக் குழந்தை தன்னைப்
போர் வீரம் மரபுவழி உள்ளதென்றே
ஊர்தடுத்தும் உறவுகள்தாம் தடுத்த போதும்
உச்சிமோந்தே அனுப்புகிறாள் மகனைத் தாய்தான் !
விளையாட்டுப் பிள்ளையினைப் போர்க்களத்தில்
விளையாட அனுப்பிட்ட தாயிடத்தே
இளையோன்தன் முதுகினிலே அம்பு தைத்தே
இறந்திட்டான் எனவந்து யாரோ சொல்ல
வளையாத மறத்திற்குப் பாலை ஊட்டி
வளர்த்திட்ட என்மார்பை அறுப்பேன்; அம்பு
துளைத்திட்ட முதுகோடே இருந்தால் என்றே
துடித்தெழுந்தே வஞ்சினந்தான் கூறுகின்றாள் !
நேர்சென்று போர்க்களத்தில் வீழ்ந்திருக்கும்
நெடுந்தோள்கள் மறவரிடை தேடுகின்றாள்
பேர்சொல்லும் மகனாகப் போர்க்களத்தில்
பெருமையுடன் மார்பினிலே அம்பு தைத்தே
ஊர்மெச்ச வீழ்ந்திருந்த மகனைக் கண்டே
உனைப்பெற்ற போதடைந்த மகிழ்வின் மேலாய்ச்
சீர்பெற்றார் போல்உவகை அடைந்தே னென்றே
சிறப்புற்றாள் மகனிறந்த துயர் மறந்தே !
வீரமுடன் அரசவையில் நீதிக்காக
வீசிட்டாள் கண்ணகியாள் சொல்லின் அம்பை
தீரமுடன் எதிர் கொள்ள இயன்றிடாமல்
தீங்கிழைத்த பாண்டியனோ உயிர் துறந்தான்
சேரனவன் கண்ணகிக்குச் சிறப்பு செய்யச்
சென்று வடஅரசர் தம்முடிகள் வென்று
தாரணிந்தே இமய வெற்பில் கல்லெடுத்துத்
தகுகோட்டம் அமைத்தின்றும் புகழில் உள்ளான் !
ஆயிரமாம் யானைகளைப் போர்க்களத்தில்
ஆர்த்தழிக்கும் வீரன்மேல் பாடும் நல்ல
பாயிரம்தான் பரணியெனும் வீர நூலாம்
பார்வியக்கக் கலிங்கத்துப் போரில் சோழன்
ஆயிரமாம் யானைகளைக் கொன்று முன்னோர்
ஆண்ட தமிழ் வீரத்தைப் பதித்ததாலே
வாயினிக்கச் செயங் கொண்டார் பாடித் தந்த
வரலாற்றுக் களஞ்சியந்தான் கலிங்கப் பரணி !
சாயாத கோபுரத்தைக் கட்டி வைத்தே
சரித்திரத்தில் நின்றிருக்கும் இராசராசன்
சேயாக உதித்திட்ட இராசேந்திரன்தான்
செப்பரிய வெற்றிகளால் புகழைப் பெற்றான்
வாயாரப் போற்றுமாறு கங்கை வென்றான்
வங்கத்தில் சென்றிலங்கை கடாரம் வென்றான்
ஓயாமல் கடல்கடந்து நாடு வென்ற
ஒப்பற்ற தமிழ் மன்னன் இவனேயன்றோ !
தொல்காப்பியப் புறத்தில் உரைத்தவாறு
தோள்களாலே வெற்றிகளைப் பெற்றோர் தம்மைக்
கல்வெட்டில் மெய்கீர்த்தி என்றே மன்னர்
களம்வென்ற வீரத்தைப் பொறித்து வைத்தார்
நல்வெட்டாய் வென்றிட்ட நாடுகள் தம்
நற்பெயரைப் பட்டியலாய்ச் செதுக்கி வைத்தார்
சொல்வெட்டால் யார்யாரை வென்றார் என்று
செப்புகின்ற பட்டங்கள் சொல்லி வைத்தார் !
வீரத்தில் விளையாடி விழுப்புண் பெற்று
விண்சென்ற மறவர் தம்சிறப்பை யெல்லாம்
ஊரவர்கள் அறிவதுடன் சந்ததிக்கே
உணர்த்துதற்குப் பெயரோடு பீடு சொல்லி
வேரவர்கள் இனத்திற்கே என்று போற்ற
வெட்டி கல்லில் நடுகல்லாய் வைத்ததாலே
பாரதனில் நம்முன்னோர் வீரம் தன்னைப்
பாராட்டி வியப்போடு வணங்குகின்றார் !
அகம் புறமாம் நானூறு பதிற்றுப்பத்து
ஆயிரமாம் யானை வென்ற பரணியோடு
தகவான கலம்பகமும் அவ்வைத் தூதும்
தருவெண்பா புறப்பொருளாம் மாலையோடு
திகழ்சோழர் மூவருலா காப்பியங்கள்
தித்திக்கும் முத்தொள்ளாயிரமும் வீரப்
புகழ்பாடும் இலக்கியங்கள் ! தமிழர் அன்று
புவிவென்றே ஆண்டதற்குச் சாட்சியாகும் !
இலக்கியங்கள் படிக்காமல் வீரமின்றி
இருக்கின்றார் தமிழரின்று! மானம் கெட்டே
உலகாண்ட தமிழரின்று சொந்தமாக
ஊர்கூட இல்லாமல் அலைகின்றார்கள்
நிலமின்றி ஏதிலராய் ஈழத்தமிழர்
நிலமிருந்தும் அடிமையராய்த் தமிழகத்தில்
குலமானம் வீரமுடன் மீண்டும் முன்னோர்
குடிப்பெருமை பெறுவதற்தே எழுவோம் வாரீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.