உழைப்பே உயர்வு தரும் !

உழைப்பே உயர்வு தரும் - இதை
உணர்ந்தால் உயர்வு மிகும் !
உழைப்பே உயர்வு தரும் - இதை
உணர்ந்தால் உலகு தொழும் !
என்றும் உழைப்பதே இன்பம் என்றதை
என்னில் பதித்து விட்டேன் - அதில்
ஏற்றமே பெற்று விட்டேன் - உயர்
பொன்னில் உயர்ந்தது புவியில் உழைப்பெனும்
போக்கினை உணர்ந்து விட்டேன் - அதில்
புதுமைகள் கண்டு விட்டேன் !
(உழைப்பே)
சுற்றி இருப்போரைச் சுண்டி இழுத்திடச்
சூழ்ச்சிகள் செய்திடுவார் - அதில்
சுரண்டிப் பணம் குவிப்பார் - அதைப் பற்றி
மகிழ்பவர் பயத்தில் மிளிர்பவர் - தன்
பணத்தினைத் தான்தொலைப்பார் - பின்
படிப்பினைத் தான்பெறுவார் !
(உழைப்பே)
தக்கத் தகிதிமி தக்கத் தகிதிமி
தாளம் நாம்போட - உயர்
தமிழில் பண்பாட - நம்
மக்கள் மனங்களில் மாட்சி மகிழ்வாட
மாண்புகள் கைகூட - அவர்
வேண்டுதல் விளைவாக...
(உழைப்பே)
விண்ணை அளத்தலும் மண்ணை அளத்தலும்
வியத்தகு புதுமையடா - அதில்
வெற்றியே விளையுதடா - உலகப்
பெண்களும் ஆண்களும் பேரிணை ஆகியே
பெற்றதிவ் வாக்கமடா - அதில்
பெறுவது ஊக்கமடா...
(உழைப்பே)
இல்லா திருப்பவர் என்றும் உழைப்பது
இன்பத்திற் காகவல்ல - தம்
இளமையைக் காக்கவல்ல - பணம்
இல்லாமை ஓட்டிட இன்னுயிர் காத்திட
என்றுமே வாழ்வைவெல்ல - மனம்
பொங்கியே புதுமையள்ள...
(உழைப்பே)
அஞ்சாச் செயல்களில் அறிவிய லாக்கம்
விஞ்சி விளங்குதடா - வான்
தஞ்சம் அளிக்குதடா - அங்கும்
கொஞ்சிக் குலவிடக் கோட்டைகள் கட்டிடக்
கொடிகள் நாட்டுதடா - அதில்
குடிபுகப் பார்க்குதடா...
(உழைப்பே)
இல்லாமை எங்கிலும் இல்லாது ஆகியே
ஏற்றங்கள் கூடட்டுமே - நம்
ஏக்கங்கள் ஓடட்டுமே - இங்கே
பொல்லாமை இல்லாத போக்கினால் எங்கிலும்
பொழுதுகள் புலரட்டுமே - அதில்
பொதுமைகள் பூக்கட்டுமே...
(உழைப்பே)
உழைப்பதி னால்பல உயர்வுகள் உண்டதில்
ஊறித் தெளிந்து கொண்டேன் - அதன்
உண்மையைக் கண்டு கொண்டேன் - எவர்
தழைப்பதும் வாழ்வதும் தாழ்வுகள் போவதும்
தருமுயர் உழைப்பு என்பேன் - அதில்
பெருமையே துலங்கக் கண்டேன்...
(உழைப்பே)
வன்முறை யாலிந்த வையகம் எங்கிலும்
வாழ்வது அமைதியல்ல - அதால்
வாட்டமே கோடிசொல்ல - பாழ்
இன்னல் விளைப்பதில் தன்னை வளர்ப்பவர்
என்ன இனிமையள்ள ?- இதில்
எதற்குத் துணிவுகொள்ள...
(உழைப்பே)
உலகத்தின் உயர்வுகள் அத்தனையும் மக்கள்
உணர்ந்துதான் பார்க்கட்டுமே - அவர்
உணர்வுகள் ஓங்கட்டுமே - நம்
நலங்கள் எங்கிலும் நடைமுறை யாகியே
நன்மைகள் ஆளட்டுமே - நாட்டில்
நலிவுகள் மாளட்டுமே...
(உழைப்பே)
- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.