காலத்தின் கட்டாயம் கருதி...!
நானாக விழுந்ததில்லை
தடுக்கி விட்டவர்கள்
என்னைத் தூக்கி விடுவதுமில்லை.
நான் விழுந்ததும்
கிடைத்ததை
வாரிச் சுருட்டிக் கொண்டு
ஓடக் காத்திருக்கிறார்கள்.
என் உப்பைத் தின்றவர்களே
கைகொட்டிச் சிரிக்கிறார்கள்
மெதுவாகச் சுதாரித்து
நானே எழுகிறேன்.
நான் ஏமாளியாக
இருந்தவரை என்னிடம்
கொழுத்த லாபம்
பார்த்தவர்கள் அவர்கள்.
தெளிந்து விட்டேன்
காலத்தின் கட்டாயம் கருதி.
இப்போதெல்லாம்
யார் தடுக்கினாலும்
நான் விழுவதுமில்லை.
கை கொட்டி
யாரும் சிரிப்பதுமில்லை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.